கோவை;கிரடாய் அமைப்பு, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலையுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை, நேற்று தாஜ் விவாந்தா ஓட்டலில் நடத்தியது,அதில் கட்டுனர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ., கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:உலகளாவிய தொழில்துறையோடு, போட்டியிட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். நாம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை, எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் 13.5 சதவீதமாக நம் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் இருக்க வேண்டும். அதற்கு, மத்தியில் ஆட்சி செய்யும் அரசு, வலுவாக இருக்க வேண்டும். அதில் அங்கம் வகிக்கும் எம்.பி.,க்கள், திறமையான, வேகமாக செயல்படும் வகையிலான, அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை, வாக்காளர்களான நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.பலமான மத்திய அரசை, நாம் தேர்வு செய்தால், நம் நாடு எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டும். வளர்ச்சியடைந்த நகரங்களின் பட்டியலில், தமிழகத்தின் சென்னை, கோவை நகரங்கள் இடம் பெறாதது, வேதனையாக இருக்கிறது.கோவை மீண்டும் உலக அளவில், அதிக வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக மாறும். அதற்கான பணிகளை தற்போதே துவங்கிவிட்டேன். அப்படி மாறினால் இங்குள்ள தொழில், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என்று பல்துறை வளர்ச்சியை எட்டிபிடிக்கும். மக்களுக்கு அதிக நன்மை பயக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கிரடாய் அமைப்புடன், சிபாகா, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியல், பொறியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
பொறியாளர்களின் கேள்விகளும் அண்ணாமலையின் பதில்களும்!
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்க காலதாமதமாகிறது. இங்கு மல்ட்டிலெவல் இன்டகிரேட்டட் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா? கோவையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள், எதிர்காலத் திட்டத்தை மனதிற்கொண்டு செயல்படுத்தப்படவில்லை. ஆட்சியில் உள்ளவர்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்த கமிஷன் பெற்று திட்டத்தை பாழ்படுத்தி விடுகின்றனர். மத்தியில் ஸ்திரமான அரசும், நல்ல எம்.பி.,யும் இருந்தால் பல நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தலாம்.ஜி.எஸ்.டி., அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வருகிறது. நோட்டீசுக்கு விளக்கம் கேட்டால், சி.ஜி.எஸ்.டி.பிரிவினர், எஸ்.ஜி.எஸ்.டி.,பிரிவில் விசாரிக்க சொல்கின்றனர். அங்கு விசாரித்தால் சி.ஜி.எஸ்.டி.,யிலேயே விசாரிக்க சொல்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?அது என்ன பிரச்னை, எதனால் ஏற்படுகிறது என்பதை, ஆழமாக பார்க்க வேண்டும். இது தொடர்பாக, நாம் நிதியமைச்சகத்திலுள்ள அதிகாரிகளை கொண்டு சரிப்படுத்தலாம். அதற்கான விழிப்புணர்வு கட்டாயம் ஏற்படுத்தப்படும்.தேர்தல் நேரத்தில் மட்டும், கட்டுமான பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்கிறதே... ஏன்?உண்மைதான். அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் நிதி வசூலிப்பதே காரணம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் தேர்தல் பத்திரம் வாங்கியதில், எந்த அரசியல் கட்சி அதிகமாக வாங்கியிருக்கிறதென்று. இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.பெட்ரோல், டீசல் மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்கக்கூடாதா ?மத்திய அரசு தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகிறது. ஆனால், மாநில அரசு அதன் மீதான வரியை குறைத்தால், அதன் விலை குறைந்துவிடும். அதை குறைக்க மறுப்பதால், விலை தொடர்கிறது. உதாரணம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெட்ரோல் விலைக்கும், தமிழகத்தில் ஓசூரின் விலைக்கும் வித்தியாசம் 6.90 ரூபாயாகும். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.2017ம் ஆண்டு மத்திய அரசு, மலிவு விலை வீடுகளுக்கு நிர்ணயித்த ரூ.45 லட்சம் என்பது உயர்த்தப்படுமா? இது குறித்து ஆவண செய்யப்படும்.
'மனுக்களுக்குஉடனடி நடவடிக்கை'
அண்ணாமலை பேசுகையில், ''இங்குள்ள கட்டுமான அமைப்பை சேர்ந்தவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான மனுக்களை வாங்கி, மத்திய அரசிடம் கொடுத்து, நிறைவேறும் என்று சொல்லி காலம் கடத்துபவன் அல்ல நான். நீங்கள் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்திருக்கிறீர்கள். அதனால் அமைச்சர்களை கோவைக்கே அழைத்து வந்து, உங்கள் கோரிக்கைகளை பேசச்செய்து, தீர்வையும் காணச்செய்வேன். மற்றொரு முறை அந்த கோரிக்கைகள், திரும்ப வராதவாறு பார்த்துக்கொள்வேன்,'' என்றார்.