உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீழ்ந்தது வருமானவரி... வென்றது இந்தியன் வங்கி! தேசிய கூடைப்பந்து போட்டியில் அபாரம்

வீழ்ந்தது வருமானவரி... வென்றது இந்தியன் வங்கி! தேசிய கூடைப்பந்து போட்டியில் அபாரம்

கோவை;அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப்போட்டியில், வருமான வரித்துறை அணியை வீழ்த்தி, இந்தியன் வங்கி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது, சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பைக்கான போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.இதன் ஆண்கள் பிரிவில், கேரள மாநில மன்சார வாரியம், வருமான வரித்துறை, மத்திய செயலகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உ.பி., போலீஸ், லயோலா மற்றும் பெண்கள் பிரிவில், கேரள மாநில மின்சார வாரியம், சவுத் சென்ட்ரல் ரயில்வே, மேற்கு ரயில்வே, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், கிழக்கு ரயில்வே, சென்ட்ரல் ரயில்வே, தெற்கு ரயில்வே, சென்னை ரைசிங் ஸ்டார் அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. போட்டியை, இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் தலைவர் ஆதவா அர்ஜூனா துவக்கி வைத்தார்.பரபரப்பான இறுதிப்போட்டியின், முதல் பாதி நேர முடிவில் 36 - 33 என்ற கணக்கில் இந்தியன் வங்கி முன்னிலை பெற்றது.தொடர்ந்து, இந்தியன் வங்கி வீரர்கள் புள்ளிகளை அதிகரித்துச்செல்ல, ஆட்ட நேர முடிவில் 73 - 65 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.பேங்க் ஆப் பரோடா அணி மூன்றாமிடத்தை பிடித்தது. சிறந்த வீரராக, இந்தியன் வங்கியின் மொயின் பெக் தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், தென் மத்திய ரயில்வே அணி 71 - 68 என்ற புள்ளிக்கணக்கில் தென்னக ரயில்வே அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.மூன்றாம் இடத்தை, கேரள மாநில மின்சார வாரிய அணி பிடித்தது. சிறந்த வீராங்கனையாக தென்னக ரயில்வே அணியின் ராஷி கோட்டானி தேர்வு செய்யப்பட்டார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன.பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டன.பரிசளிப்பு விழாவில், ஏ.பி.டி., லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஹரிஹர சுதன், சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை