உடுமலை அரசு கலைக்கல்லுாரி, இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, புத்துணர்ச்சி வகுப்புகள் துவங்கியது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டுக்கான பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை, இரண்டு கட்டங்களாக மே இறுதியில் நடந்தது.கலந்தாய்வில் சேர்க்கை நடத்தப்பட்டு, நேற்று முதல் நாளாக மாணவர்கள் கல்லுாரிக்கு வர துவங்கினர்.கல்லுாரி கல்வி இயக்ககத்தின் அறிவுரைப்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் வாரம் முழுவதும், புத்துணர்ச்சி செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு, கல்லுாரியின் சூழலில் ஆர்வம் ஏற்படும் வகையில், புத்துணர்ச்சி வகுப்புகள் இருப்பதற்கு அறிவுறுத்தியுள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியிலும் நேற்று முதல் புத்துணர்ச்சி செயல்பாடுகள் துவங்கின.நாள்தோறும் மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள், துறைத்தலைவர்கள், கருத்தாளர்களின் கருத்தரங்கம், யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தப்படுகிறது.இதன் துவக்கமாக, முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பாக, கல்லுாரியில் சிறப்பு கூட்டம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.அந்தந்த பாடப்பிரிவுகளின் துறைத்தலைவர்கள், கல்லுாரியின் சிறப்புகள், வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். பொள்ளாச்சி
பொள்ளாச்சியில், 2024--25ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரி மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள், நேற்று துவங்கியது.பொள்ளாச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார்.கோவை ஆயுதப்படை காவலர் பாபு, முதலாமாண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, வரவேற்றார். மேலும், மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரித்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.துறைத் தலைவர்கள் செந்தில்நாயகி, புஷ்பலதா, நிர்மலாதேவி, கல்லுாரி கண்காணிப்பாளர் கவுரிமனோகரி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.- நிருபர் குழு -