ஆனைமலை;ஆனைமலை வட்டாரத்தில், 2024--25ம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கம்பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தில் சமச்சீர் உரமிடல், ரசாயன உரபயன்பாட்டை குறைத்தல், உயிர்ம சத்து நிறைந்த இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) வெங்கடாசலம், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தலின் அவசியம், தற்போது அரசின் இணையதளம் வாயிலாக சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் பண்ணை குட்டைகள் அமைக்க வழங்கப்படும் மானிய விவரம், பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள், மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.வேளாண் துணை இயக்குநர் (ஓய்வு) தமிழ்ச்செல்வன் பேசியதாவது:ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மட்டுமே எந்த ஒரு பூச்சி, நோய் கட்டுப்பாட்டில் முதன்மை வகிக்கிறது, என்ற கருத்தை விவசாயிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.அகத்தி, கிளிரிசிடியா, சீமை அகத்தி, தேக்கு, வேம்பு, மகாகனி, நாவல், கொய்யா, மலைவேம்பு போன்ற உயிர் பன்மய சூழலை மேம்படுத்தும் தன்மை வாய்ந்த மரங்களை, வாய்ப்புள்ள காலி இடங்களிலும், உயிர் வேலியாகவும் வைத்து பராமரிக்கலாம்.இம்மரங்களில் கிடைக்கும் பசுந்தழைகளை தீவனமாகவும், தென்னை மரத்திற்கு உரமாகவும் பயன்படுத்தினால், தோப்பிலேயே இடுபொருள் தயாரிப்பதோடு, உயிர் பன்மயத்தை பாதுகாக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும் இயலும்.இவ்வாறு, அவர் பேசினார்.வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் பேசுகையில், ''மானாவாரியில் மாடு, ஆடு, நாட்டுகோழி, தேனி வளர்ப்பு மற்றும் பழமர கன்றுகள் சேர்த்து, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் ஒரு ெஹக்டேருக்கு, 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துணை வேளாண் அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர்கள் செந்துார்குமரன் மற்றும் சித்திக் செய்திருந்தனர்.'அட்மா' திட்ட உதவி மேலாளர் பாரதிராஜா, துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.