| ADDED : ஜூலை 14, 2024 03:11 PM
வால்பாறை:அங்கன்வாடி மையங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப்பகுதியில், 43 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. குழந்தைகள் மூளைத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 வயது முதல் 4 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வி கற்றுத்தரப்படுகிறது.குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், நாள் தோறும் கதை, பாட்டு, விளையாட்டு, நடனம் வாயிலாக கல்வி கற்றுத்தரப்படுகிறது. குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன. அங்கன்வாடியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குப்படுகிறது.ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு, அவர்களுக்கு சத்தான உணவும் வழங்கப்படுகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்(பொ) சூரியாவிடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டு வால்பாறையில் உள்ள, 43 அங்கன்வாடி மையங்களில், 590 குழந்தைகள் படித்தனர். இந்த ஆண்டு, 790 குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 200 குழந்தைகள் அதிகமாக சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பலானவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது,'' என்றார்.