உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் தரமாயிருக்கா?  மேல்நிலைத் தொட்டிகளில் பரிசோதனை ; வாரந்தோறும் 8 முதல் 10 மாதிரிகள் சேகரிப்பு

குடிநீர் தரமாயிருக்கா?  மேல்நிலைத் தொட்டிகளில் பரிசோதனை ; வாரந்தோறும் 8 முதல் 10 மாதிரிகள் சேகரிப்பு

பொள்ளாச்சி : உள்ளாட்சி அமைப்புகளில், வாரந்தோறும் வெவ்வேறு இடங்களில், 8 முதல் 10 மேல்நிலைத் தொட்டிகளில் உள்ள குடிநீரின் தரம், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, கடந்த, 20 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததும் இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது.இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் குடிநீரை, மாதந்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று, பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகள் மற்றும், 118 ஊராட்சிகளுக்கு, ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதற்காக, ஆழியாறு ஆற்றுப்படுகையில், ஒன்பது குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீரை மேல்நிலைத்தொட்டிக்கு கொண்டு வரும் பிரதான குழாய்கள் மற்றும் தொட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பகிர்மான குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மேல்நிலைத் தொட்டிகளில் உள்ள தண்ணீரை, வாரந்தோறும், 5 முதல் 8 முறை பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் மாதிரி சேகரம் செய்து, கோவை ஆய்வகத்திற்கு அனுப்பி தரத்தை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணியில், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அதிகாரிகளுடன் இணைந்து, முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும். குடிநீர் தொட்டி அல்லது சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வாறு குளோரினேஷன் செய்யப்படுகிறதோ, அதேபோல, குழாய்கள் வாயிலாக வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.மருத்துவமனைகளில் வாந்தி, வயிற்றுப்போக்கு சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விபரங்கள் சேகரம் செய்யப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரமும் உறுதி செய்யப்படுகிறது.அதேபோல, குடிநீரில், குளோரின் அளவு 0.2 முதல் 0.5 பி.பி.எம்., அளவில் இருக்கவும், குறைந்திருந்தால் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, குளோரினேஷன் செய்யப்படும்.அவ்வகையில், ஒவ்வொரு மேல்நிலைத் தண்ணீர் தொட்டியும், அதிகபட்சம், 6 மாதம் இடைவெளியில், சுழற்சி முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எப்படி நடக்கும் பகுப்பாய்வு?

குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் இருக்கும் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் மாதிரிகள், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அப்போது, தண்ணீரில் 'இகோலி' பாக்டீரியா கண்டறியப்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி செய்யப்படும்.தொடர்ந்து, குடிநீர் குழாய்களில், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குளோரினேஷன் செய்யப்படும். இதேபோல, தண்ணீரில் 'புளோரைடு' இருப்பது கண்டறியப்பட்டால், அந்த தண்ணீரை மக்கள் பருக வேண்டாம். உடலுக்கு தீங்கும் ஏற்படும் என, தெரிவிக்கப்படும், என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை