கோவை:''விவசாயிகள் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்தைப் பயிரிட்டு, நல்ல மகசூலும் வருமானமும் பெறலாம்,'' என்று, வேளாண் பல்கலையின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன் தெரிவித்துள்ளார்.அனைத்துப் பருவ நிலையிலும், எளிதாக வளரக்கூடிய பயிர் மக்காச்சோளம். இந்திய அளவில் 350 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால், அதன் தேவை 425 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில், பரவலாக அனைத்து இடங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டாலும், பெரம்பலுார், துாத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில்தான், அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.தமிழகத்தில் 4.26 லட்சம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் 2.3 லட்சம் ஏக்கர் பரப்பிலும், வடகிழக்குப் பருவமழை காலங்களில், 2 லட்சம் ஏக்கர் பரப்பிலும், சாகுபடி செய்யப்படும். மக்காச்சோளம் தேவை அதிகரிக்கும்
தற்போது தமிழகத்தில், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 45 லட்சம் டன் அளவு தேவைப்படுகிறது. எத்தனால் உற்பத்தி நிறுவனங்களின் வருகையால், இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 60 முதல் 65 சதவீதம் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், 10 சதவீதம் ஸ்டார்ச் உற்பத்திக்கும், 20 சதவீதம் இதர துறைகளுக்கும், 5 முதல் 7 சதவீதம் மட்டுமே உணவுப் பயன்பாட்டுக்கும் செல்கிறது.மக்காச்சோளம் உற்பத்தியைக் காட்டிலும், அதன் தேவை அதிகம் உள்ளதால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறப்படுகிறது.எனவே, விவசாயிகள் அதிக மகசூல் தரும் மக்காச்சோள ரகங்களைப் பயிர் செய்வதன் மூலம், நல்ல மகசூல் மற்றும் அதிக வருமானம் பெறலாம் என்று, நிபுணர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் ரவிகேசவன் கூறியதாவது:மக்காச்சோள பயிரை பொருத்தவரை, ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 ஆயிரம் கிலோ உற்பத்தியை விவசாயிகள் பெற இயலும். எந்தப் பயிராக இருப்பினும், விவசாயிகள்அப்பகுதியின் தண்ணீர் வளத்தை மையமாகக் கொண்டு, முடிவு செய்ய வேண்டும்.வீரிய ஒட்டு மக்காச்சோள ரகங்களான கோஎச்(எம்) 6, கோஎச் (எம்) 8, கோஎச் (எம்) 11, விஜிஐ(எம்) எச் 2 ஆகிய ரகங்களை, விவசாயிகள் பயிரிட்டு அதிக மகசூல் பெற முடியும். கோஎச்(எம்) 6
இந்த ரகம், 110 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு இறவையில் 7,350 கிலோ மகசூலும் மற்றும் மானாவரியில் 4,906 கிலோ மகசூலும் தரக்கூடியது. சோள அடிச்சாம்பல் நோய், மேடிஸ், இலைக் கருகல் நோய்கள் போன்றவற்றை எதிர்க்கும் திறனுடையது. தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பருமனான மணிகள் உடையது. கோஎச் (எம்) 8
இந்த ரகம், 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு இறவையில் 7,500 முதல் 8,000 கிலோ மகசூலும், மானாவரியில் 5,000 முதல் 5,500 கிலோ மகசூலும் தரக்கூடியது. தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. சோள அடிச்சாம்பல் நோய், மேடிஸ் மற்றும் இலைக் கருகல் நோய்களை எதிர்க்கும் திறனுடையது. கோஎச் (எம்) 11
இந்த ஒட்டு ரகம், ஓர் வழி ஒட்டு கலப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இறவையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 8,100 கிலோ மகசூலும் மானாவாரியில் 6,590 கிலோ மகசூலும் தரக்கூடியது. நடுத்தர வயதுடையது. வறட்சியைத் தாங்கி வளரும். ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பெரியமணிகள், அதிக விதை எடை உடையது. சிறந்த தீவனப் பண்புகளைக் கொண்டது.ஆண், பெண் ரகங்கள் ஒரே சமயத்தில் பூப்பதால் வீரிய ஒட்டு விதை உற்பத்தி எளிதானது. படைப்புழு மற்றும் கரிக்கோல் அழுகல் நோய்க்கு, மிதமான எதிர்ப்புத் திறனுடையது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடி, புரட்டாசி, தைப்பட்டங்களில் பயிரிட ஏற்றது. விஜிஐ(எம்) எச் 2
இந்த ஒட்டு ரகம், ஓர் வழி ஒட்டு கலப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் ஏக்கருக்கு 6,350 கிலோ கிடைக்கும். பசுமை மாறா தன்மை உடைய இந்த வீரிய ஒட்டு, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற தானியம் உடையது. 81 சதவீதம் முழு தானியம் காணும் திறனுடையது. படைப்புழு, தண்டு துளைப்பான், கரிக்கோல் அழுகல் போன்ற பூச்சி மற்றும் நோய்களுக்கு, மிதமான எதிர்க்கும் திறன் கொண்டது.இவ்வாறு, அவர் கூறினார்.