கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், அரசு அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கோவையிலுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கோவையின் புதிய எம்.பி.,ராஜ்குமாரும் பங்கேற்றனர். இவர், முன்பு அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, கோவை மேயராக இருந்தவர். தற்போது தி.மு. க.,வில் ஐக்கியமாகி அக்கட்சி சார்பில், எம்.பி.,யாகி இருக்கிறார். அ.தி.மு.க.,வில் பலருடன் நன்கு பழகியவர்.நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன் மற்றும் அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு அருகே, எம்.பி.,ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஒருவருக்கொருவர் சிரித்து பேசி கைகுலுக்கிக் கொண்டனர்.அப்போது பார்வையாளர்களாக நின்றிருந்த கழக உடன்பிறப்புகள், 'தற்போது எம்.பி.,யாக இருந்தாலும், முன்பு அ.தி.மு.க.,வில் இருந்தபோது அனைவரும் சகோதரர்களாக ஒருவருக்கொருவர் பழகினர். அந்த பழக்கதோஷம்தான், இப்போது அண்ணன் - தம்பிகளாக உலாவுவதற்கு காரணம். இதெல்லாம் கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு' என்றனர்.