| ADDED : ஜூன் 21, 2024 12:07 AM
பொள்ளாச்சி:'தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கு பயனாளிகள் பாகுபாடின்றி தேர்வு செய்ய வேண்டும்,' என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில், சாதாரண கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ் பேசும்போது, ஆவலப்பம்பட்டி - ஜோத்தம்பட்டி ரோடு, ஆவலப்பம்பட்டி - கணக்கம்பட்டி ரோடு வழி வெள்ளாளபாளையம், ஜோத்தம்பட்டி - அடிவள்ளி ரோடு, சின்ன நெகமம் - மூலனுார் ரோடு போன்றவை சேதமாக உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.எனவே, இந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பு வீடுகள் பராமரிப்பு பணிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்யும் போது எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் பட்டியல் தயார் செய்ய வேண்டும், என, வலியுறுத்தினார்.இதேபோன்று, ஒன்றிய திட்ட வளர்ச்சிப்பணிகள், சுகாதாரத்துறை, மற்ற துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகள் பேசினர். ஒன்றியம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.