மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ; பக்தர்கள் பரவசம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அதிகாலை, 6:00 மணி முதலே பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வர துவங்கினர். காலையில், ஊர் மணியக்காரர் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு மாங்கல்ய சீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில், தங்க கிரீடம், சூலாயுதம், பட்டுப் புடவை வழங்கப்பட்டன.பொள்ளாச்சி நகை தொழிலாளர்கள் சார்பில், அம்மனுக்கு ஆபரணங்கள் வழங்கப்பட்டன. தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றன. அதன்பின், உரலில் மஞ்சள் இடிக்கும் வைபவம் நடந்தது.சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மஞ்சள் சரடு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.