| ADDED : ஜூன் 18, 2024 10:45 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் குற்ற செயல்களை தடுக்க, பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள், 14 ஆயிரம் பேரை பருந்து செயலி வாயிலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் பழைய குற்றவாளிகள், 50 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'மாநில அளவில் பருந்து செயலியில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள், ரவுடிகள், கூலிப்படையினர் முகவரி, போட்டோ, வழக்குகள் மற்றும் அவர்கள் செய்த குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களின் நடமாட்டம் தொடர்ந்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உதாரணமாக, குறிப்பிட்ட நபர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவர் விடுதலையாகும் தேதி, ஜாமின் மனு செய்து உள்ளாரா, அவர் விடுதலை பெற்று விட்டாரா உள்ளிட்ட விபரங்கள் பருந்து செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதனால் பழைய குற்றவாளிகள் குறித்த விபரங்களை போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. விடுதலையாகிய வரும் நபரை தொடர்ந்து கண்காணிக்கவும் முடிகிறது. இதனால் குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க முடியும். பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் பழைய குற்றவாளிகள், 50 பேர் உள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் எங்கு இருக்கிறார்கள், அவருடைய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.இரவு நேரங்களில் அவர்களின் நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது. இதனால் பழைய குற்றவாளிகளால் மீண்டும், மீண்டும் குற்ற செயல்கள் செய்வது தடுக்க முடிகிறது'' என்றனர்.