| ADDED : ஜூலை 29, 2024 03:04 AM
வால்பாறை:வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிங்கவால் குரங்குகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கொட்டைளை உணவாக உட்கொள்கின்றன. சமீப காலமாக வால்பாறை நகர், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால்குரங்குகள் தொழிலாளர் விடுகளிலும், வால்பாறை நகரில் உள்ள கடை மற்றும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.இதனால், வீடுகளின் கதவு, ஜன்னல்களை கூட திறந்து வைக்க முடியாத நிலையில் மக்கள் நாள் தோறும் தவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் இரண்டாவது கி.மீ., துாரத்தில் உள்ள, புதுத்தோட்டம், அய்யர்பாடி ரோட்டில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன.அவற்றுக்கான உணவு வனப்பகுதியில் உள்ளன. ரோட்டிற்கு வரும் போது, உணவு கொடுத்து பழக்கியதன் விளைவால், சிங்கவால் குரங்குகள் ரோட்டையும், குடியிருப்பை நோக்கியும் வருகின்றன.குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிங்கவால் குரங்குகளுக்கு, பொதுமக்கள் உணவு வழங்கக் கூடாது. சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். சிங்கவால் குரங்குகள் நடமாடும் பகுதியில் அதற்கு உணவு கொடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால், வனஉயிரின பாதுகாப்பு சட்டப் படி கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.