உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீட் தேர்வு: 95 சதவீத மாணவர்கள் எழுதினர்

நீட் தேர்வு: 95 சதவீத மாணவர்கள் எழுதினர்

கோவை:கோவையின் பல்வேறு மையங்களில், நடந்த 'நீட்' தேர்வை, 95 சதவீத மாணவர்கள் எழுதினர்.பிளஸ், 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தேர்வு, மதியம், 2:00 முதல் மாலை, 5:20 மணி வரை நடந்தது.கோவை மாவட்டத்தில், எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, நேஷனல் மாடல் பள்ளி, ஆர்.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரி, ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, என்.ஜி.பி., பள்ளி, கோவை பப்ளிக் பள்ளி, வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி, கிக்கானி வித்யா மந்திர், விவேகம் பள்ளி, சுகுணா பிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தேர்வு நடந்தது.காலை, 11:00 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவர்கள், காலை, 10:00 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்துவங்கினர். அனைத்து தேர்வு மையங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பெரும்பாலான மாணவர்கள் தேவையான ஆவணங்களை எடுத்து வந்திருந்தனர். தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் செயின், தோடு, கொலுசு உள்ளிட்ட பொருட்களை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து செயின், தோடு, கொலுசு ஆகியவற்றை மாணவர்கள் கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர். நீட் தேர்வு குறித்த போதிய விழிப்புணர்வு, வழிமுறைகள் பெற்றோர்கள், மாணவர்கள் நன்கு அறிந்திருந்ததால், கோவை மாவட்டத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி நீட் தேர்வு அமைதியாக நடந்தது.

319 பேர் ஆப்சென்ட்

கோவை மாவட்டத்தில், தேர்வு எழுத, 7,447 மாணவர்கள் தகுதி பெற்றனர். இதில், 2,378 மாணவர்களில், 2,270, 5069 மாணவியரில், 4,858 என, மொத்தம், 7,128 பேர் தேர்வு எழுதினர். மாணவர்களில், 108, மாணவியரில், 211 என, மொத்தம், 319 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வை எழுத தகுதி பெற்ற, 13 மாற்றுத்திறனாளிகளில், ஒருவர் ஆப்சென்ட் ஆனார்.தேர்வு மிகவும் எளிது. இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம். நேரம் சற்று பற்றாக்குறையாக இருந்தது. கல்லுாரியில் பயின்று வருகிறேன். இது எனக்கு இறுதி வாய்ப்பு என்பதால் தேர்வை எழுதியுள்ளேன். நீட் தேர்வு அவசியம்.ரவீனா, சிவகங்கைஅனைத்து பாடங்களிலும், கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தன. இதனால், தேர்வு எளிதாகவே இருந்தது. மற்றபடி நீட் தேர்வு இருப்பது மிகவும் பயனுள்ளது. நீட் தேர்வால், சரியான இடத்தை பிடிக்க முடியும்.விஷ்ணுபிரியா, வடவள்ளிதேர்வு மிகவும் எளிதாக இருந்தது. இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது. தேர்வு நேரம் சரியாக இருந்தது. ஊழல் இல்லை எனில் நீட் தேவையில்லை. ஆனால், இங்கு அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதால் நீட் இருந்தால் மட்டுமே படிப்பை நம்பி உள்ளவர்களுக்கு உயர்கல்வி எளிதாகும்.அகல்யா, அவிநாசிவேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினம். மற்றபடி தேர்வு மிகவும் எளிது. நீட் தேர்வு அவசியம் தேவை.அஸ்மிதா, ராமநாதபுரம்கேள்விகள் அனைத்தும் சரியாக கேட்கப்பட்டிருந்தன. தேர்வு கூடத்தில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. மற்றபடி, தேர்வு எளிதாகவே இருந்தது. இயற்பியலில் கணக்குகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு கட்டாயம் தேவை. அப்போது தான் தகுதியான நபர்களுக்கு தகுதியான இடம் கிடைக்கும்.சுமையாபாணு, மேட்டுப்பாளையம்இயற்பியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன. நீட் தேர்வு வேண்டும். அப்போது தான் உயர்கல்வி வாய்ப்பை பெற எளிய வழி கிடைக்கும்.பொன்நாக நந்தினி, பொள்ளாச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை