உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை: அன்னுார் பகுதி மக்கள் அதிருப்தி

பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை: அன்னுார் பகுதி மக்கள் அதிருப்தி

அன்னுார்;பட்ஜெட் கூட்டத்தொடரில் அன்னூர் தாலுக்கா மக்களின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் (29ம் தேதி) முடிவடைந்தது. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியானது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அன்னுார் தாலுகா மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.1,762 கோடி ரூபாய் செலவிலான அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் முடிந்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. பில்லுார் அணை நிரம்பி, பவானி ஆற்றில் நீர் அதிக அளவில் செல்கிறது. ஆனால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு இந்த கூட்டத்தில் வெளியாகவில்லை.அத்திக்கடவு முதல் திட்டத்தில் விடுபட்ட, 800 குளம், குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாம் திட்டம் குறித்தும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், ஆறு ஊராட்சிகளில் 3,500 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்தும் அறிவிப்பு இல்லை.அன்னுார் அரசு மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக தரமுயர்த்த 10 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். செல்லப்பம்பாளையம், கஞ்சப்பள்ளி, பிள்ளையப்பம் பாளையம், பொன்னே கவுண்டன்புதுார் உள்ளிட்ட நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்து அறிவிப்பு இல்லை.அன்னுார் தாலுகாவாக உருவாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், அன்னுார் கிளை நுாலகத்தை தாலுகா நுாலகமாக தரம் உயர்த்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. நான்காண்டுகளாக முடங்கி கிடக்கும் அன்னுார் கிழக்கு புறவழிச் சாலை குறித்தும், அன்னுார் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் குறித்தும், அன்னுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.அன்னுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. இன்னும் சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.அன்னுார் கோர்ட் சிறிய வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. அதுக்கு இடம் ஒதுக்குவது மற்றும் சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கும் அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து அன்னுார் மக்கள் கூறுகையில், ''அன்னுார் தாலுகா மக்களின் எந்த எதிர்பார்ப்புக்கும் இந்தக் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகவில்லை. நிதி ஒதுக்கவில்லை. இதுகுறித்து அவிநாசி எம்.எல்.ஏ., தனபால் மற்றும் நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர், முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை