| ADDED : ஆக 06, 2024 07:06 AM
தொண்டாமுத்தூர்: பேரூரில், ஆடி அமாவாசையையொட்டி, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது விசேஷம் என்பதால், ஆடி அமாவாசை தினமான நேற்று முன்தினம், பேரூர் படித்துறைக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர்இங்கு, போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய போக்குவரத்து மாற்றங்களை செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்தனர்.நேற்று முன் தினம் அதிகாலை முதலே, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில், பேரூருக்கு வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேரூர் செட்டிபாளையம் மயானம் முதல் ஆண்டிப்பாளையம் பிரிவு வாய்க்கால் பாலம் வரையிலான, சுமார், 2 கி.மீ., தொலைவிற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.பொதுமக்கள், தங்கள் வாகனங்களை எங்கு பார்க்கிங் செய்வது என தெரியாமல் திண்டாடி, சாலை ஓரத்திலேயே நிறுத்தி விட்டு சென்றனர். ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை தினத்தில், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.