அன்னுார்;'அன்னுாரில், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ. 18.50 லட்சம் மட்டுமே ரூ.1.50 கோடி இல்லை என்று கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தால் பொய் புகார் அளித்த பா.ஜ., முன்னாள் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கோவை ரூரல் எஸ்.பி., தெரிவித்தார்.அன்னுார் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன் நகர் தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார், 45, இவர் பா.ஜ., ஓட்டுனர் அணியின் அமைப்பு சாரா ஒன்றிய தலைவராக இருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இல்லை. இவர் வாகனங்களுக்கு வாட்டர் வாஸ் செய்யும் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இவரது வீட்டில் கடந்த 18ம் தேதி மர்ம நபர்கள், கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி ரூபாய், ஒன்பது பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்பட்டது.இதுகுறித்து விஜயகுமார், அன்னுார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.இந்நிலையில் விஜயகுமார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தவரை சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் போலீசார் சோமனுார் அருகே நேற்று கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ. 18.50 லட்சம் மட்டுமே ரூ.1.50 கோடி இல்லை. இது தொடர்பாக பொய் புகார் கொடுத்த விஜயகுமார் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுகுறித்து, கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறியதாவது:கடந்த 18ம் தேதி அன்னுார் சொக்கம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ததில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன், 33, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 18.50 லட்சம் ரொக்கம், 9 சவரன் தங்கம் அதாவது 7 மோதிரம், 8 கம்மல்கள், 3 செயின்கள், காயின்கள் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்தும் மீட்கப்பட்டன.அன்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்து ரூ.18.50 லட்சம் பணம் எடுத்ததாக தான் கூறினார். இதுகுறித்து புகார் அளித்த விஜயகுமாரிடம் கேட்டபோது, அவர் வீட்டில் ரூ.1.50 கோடி இல்லை, ரூ.18.50 லட்சம் தான் இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், போலீசாரிடம் அதிக பணம் கொள்ளை போனது என சொன்னால்தான், துரிதமாக வேலை செய்வார்கள் என சொன்னதாக கூறினார். இதனால் பொய் புகார் கூறிய அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 182, 203 பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டு கோள். நகை, பணம் தொலைந்தால் அல்லது திருடு போனால் அதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம். இதனால் விசாரணை திசை மாறும். வெளியூர் செல்லும் போது, வீட்டின் முன் பக்க கேட்டில், உள் பக்கம் பூட்டு போடுங்கள். வெளிப்பக்கம் போடுவதால் வீட்டில் யாரும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. கொள்ளையர்களும் இதை நோட்டம் விடுவார்கள்.இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்கு வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் பெரிதும் உதவினார்கள். தெருவுக்குள் புதுசா வந்த வரை நோட் பண்ணி அவர்கள் போலீசாரிடம் சொன்ன தகவல்கள் வழக்கிற்கு உதவியது. கைது செய்யப்பட்டுள்ள அன்பரசன் மீது பல்வேறு மாவட்டங்களில் 18க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இந்த வழக்கில் கொள்ளையில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசாரை, ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.---
கொள்ளையன் சிக்கியது எப்படி...
அன்னூர் சொக்கம்பாளையம் திருமுருகன் நகரில் உள்ள விஜயகுமார் வீட்டின் முன்பு சம்பவத்தன்று மதியம் நேரத்தில், சந்தேகம்படும்படி அன்பரசன் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து அருகில் வசித்தவர்கள், அன்பரசனின் அங்க அடையாளங்கள், ஆடைகளின் கலர், வாகனத்தின் பதிவெண் போன்றவற்றை குறித்து வைத்திருந்தனர். கொள்ளை நடந்தது தெரிந்ததும் அது பற்றி போலீஸிடம் தெரிவித்தனர்.போலீசார் அதை வைத்து அந்த தெரு மற்றும் சாலைகளில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அன்பரசன் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவான நிலையில், வாகனம் சென்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடைசியாக கருமத்தம்பட்டி அருகே சோமனூர் வரை வாகனம் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அன்பரசன் சோமனூரில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோமனூரில் வைத்து போலீசார் அன்பரசனை கைது செய்தனர்.---