பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா அருகில், சாலையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் பெருகுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி நகரில், பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, கடைவீதி - உடுமலை ரோடு சந்திப்பு, தேர்முட்டி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டுள்ளது.இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமமின்றி, ரவுண்டானாவைக் கடந்து, அந்தந்த வழித்தடத்தை நோக்கி கடந்து செல்கின்றனர்.ஆனால், ரவுண்டானா அருகில், புதிது புதிதாக தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.பூக்கள், கீரை, சுண்டல் என, பலதரப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுவண்டி கடைகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்துகின்றனர். இதனால், பிற வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மக்கள் கூறுகையில், 'காலை மற்றும் மாலை நேரங்களில், தள்ளுவண்டி கடைகளின் முன், கூட்டம் சேர்ந்து விடுகிறது. இரு சக்கர வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நடந்து செல்லவும் முடிவதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.