உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓ... பட்டர்பிளை... பட்டர்பிளை...! வெள்ளலுாரில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு 

ஓ... பட்டர்பிளை... பட்டர்பிளை...! வெள்ளலுாரில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு 

கோவை;கோவை வெள்ளலுார் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்கா, நேற்று திறக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டுக்கு முன் பல ஆண்டுகளாக வறட்சியாக இருந்த வெள்ளலுார் குளம் மற்றும் 6.5 கி.மீ., நீர் வழிப்பாதைகள், 'கோவை குளங்கள்' அமைப்பால் துார் வாரப்பட்டு நிலையில், குளத்தில் நீர் நிரம்ப துவங்கியது. குளக்கரையில், மியாவாக்கி அடர்வன முறையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 275 வகையான நாட்டு மரங்கள் நடப்பட்டு, அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு, கோவை குளங்கள் அமைப்பு மற்றும் 'நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி' சார்பில், மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கோவை வெள்ளலுார் குளக்கரையில் மட்டும், 103 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. மேலும், இதுகுறித்த தகவல்கள் அனைவருக்கும் சென்றடையும் விதமாக, 'தி பட்டர்பிளைஸ் ஆப் வெள்ளலுார் வெட்லேண்ட்' என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்து வெளியிடப்பட்டது.இதையடுத்து, 'மிலாக்ரான்' தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியுதவியுடன், வெள்ளலுார் குளக்கரையில், 2023 ஜூன் 5ம் தேதி, நீர்வளத்துறையின் அனுமதியுடன், பட்டாம்பூச்சி பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கி முடிந்த நிலையில், நேற்று பூங்கா திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன், மிலாக்ரான் நிறுவனத்தின் 'மோல்ட் மாஸ்டர்ஸ்' டிவிஷன் சர்வதேச நிர்வாகி ஆன்ஸ் அகல்ஸ்டெய்ன் ஆகியோர், பூங்காவை திறந்து வைத்தனர். நீர்வளத்துறை நொய்யல் கிழக்கு பிரிவு உதவி பொறியாளர் சிவக்குமார், 'மோல்ட் மாஸ்டர்ஸ்' நிர்வாகி ஆல்பிரெட் நோபிள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அனுமதி இலவசம்

கோவை குளங்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:பட்டாம்பூச்சி வகைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உட்பட பல தகவல்களை தெரிவிக்கும் வகையில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகள் குறித்து அறிந்துக் கொள்ள, ஏற்ற இடமாக இது இருக்கும். அனுமதி இலவசம். ஆனால், ஒருங்கிணைப்பதற்கு வசதியாக பொதுமக்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும், பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவர்கள், தொழில் நிறுவன ஊழியர்கள், கார்ப்பரேட் ஊழியர்களுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கண்டுகளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.முன்பதிவுக்கு: 98433 46298.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை