அந்திக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட காலமே வயோதிக காலம். இறுதிக்காலம் ஆனந்தமாக கழியவில்லை என்றாலும், அமைதியாக கழிய வேண்டும் என்பதுதான், மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்பு. பெரும்பாலான குடும்பங்களால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதே ஆய்வுகள் உணர்த்தும் உண்மை. இன்றைக்கு ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் பலர், ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இது குறித்து, அரசு ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் பலராமன், பல விஷயங்களை நம்மோடு வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்...!அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதன் முக்கிய நோக்கமே பணி ஓய்வுக்கு பிறகு, பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாமல், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து, இறுதி காலம் வரை நிம்மதியாக வாழவேண்டும் என்பதே. ஆனால் இன்றைக்கு ஓய்வூதியம் பெறும், பல அரசு ஊழியர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு வைத்திய செலவுக்கு பணம் இல்லாமல் உள்ளனர்.பெற்றவர்களை அன்போடு அரவணைக்கும் பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் பல குடும்பங்களில் முதியவர்கள், சூழ்நிலை கைதிகளாக அமைதி இழந்து வாழ்கின்றனர்.அரசு உயர் பதவியில் இருந்து, ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி பல ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார். சொந்த வீடு, பிற சொத்துக்களும் உள்ளன.ஆனால் அவர், தன் நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் முதியோர் இல்லத்தில் அதரவற்ற நிலையில் தங்கி இருக்கிறார். 80 வயதை கடந்த அவர்களின் வாழ்க்கை பரிதாபமாக உள்ளது.சில குடும்பங்களில், பென்ஷன் பணத்தையும் பிடுங்கி கொள்ளும் பிள்ளைகள் உள்ளனர். இது போல பல புகார்கள் எங்கள் சங்கத்துக்கு வருகின்றன.குடும்ப விஷயம் என்பதால், தலையிட முடியவில்லை. சங்கத்தின் மூலம் முடிந்ததை செய்து கொடுக்கிறோம். சிலருக்கு ஆறுதலை தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இன்றைய சமூகத்தில் முதியவர்களுக்கு உறவுகளால் ஆறுதலும், அரவணைப்பும் கிடைப்பதில்லை. வெளி நாட்டில் இருக்கும் மகன், மகள்கள் முதியோர் இல்லத்துக்கு பணம் அனுப்பி விட்டால் கடமை முடிந்ததாக நினைக்கின்றனர். பெற்றோர்களின் பாசத்தையும், பரிதவிப்பையும் உணர்வதில்லை. ஓய்வூதியம் பெறும் முதியவர்களின் நிலையே இப்படி என்றால், எந்த வருமானமும் இல்லாமல் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் வாழும் பெற்றோர்களின் நிலையை, இங்கு சொல்ல முடியாது. அவ்வளவு கொடுமை.வேதனையுடன் சொல்லிக் கொண்டே போகிறார் பலராமன்.
முதியோர் இல்லம் கட்டுமா அரசு?
பலராமன் கூறுகையில், ''தங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, இறுதி காலத்தில் பிள்ளை மதித்து பாதுகாக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள், இறுதி காலம் வரை, ஓய்வூதிய பணத்தை தங்கள் வசம் வைத்து கொள்ள வேண்டும். அவர்களின் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால், முதியோர் இல்லங்களில் கட்டணம் செலுத்தி தங்கி, இறுதி காலத்தை கழிக்கலாம். ஆதரவற்ற அரசு ஓய்வூதியர்களுக்கென கட்டணம் செலுத்தும் முதியோர் இல்லங்களை, அரசு உருவாக்குவதே அவர்களுக்கு பாதுகாப்பு,'' என்றார்.