உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்ந்தது சின்ன வெங்காயம், தக்காளி விலை  

உயர்ந்தது சின்ன வெங்காயம், தக்காளி விலை  

கோவை : மழை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி விலை உயர்ந்துள்ளது.கோவைக்கு தொண்டாமுத்துார், ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சீசனுக்கு ஏற்றபடி விலை ஏறி, இறங்குவது வழக்கமாகும். வெயில் காலம் என்பதால், கடந்த சில மாதங்களாக உற்பத்தி அதிகரித்து சின்ன வெங்காயம், தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது கோடைமழை துவங்கி இருப்பதால், விவசாயிகள் இப்போதுதான் சின்ன வெங்காயம் விதைப்பை துவங்கி உள்ளனர். அதனால் பட்டறையில் சேமித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் விலை அதிகரித்துள்ளது. தக்காளியை பொறுத்தவரை, கனமழை காரணமாக செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் குறைந்துள்ளது. இந்த காரணங்களால் சின்ன வெங்காயம், தக்காளி இரண்டும் விலை அதிகரித்துள்ளது. நேற்று வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ நாட்டு தக்காளி 60 ரூபாய்க்கும், ஆப்பிள் தக்காளி 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது. இவை தவிர, மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ 240 ரூபாய்க்கும், அவரைக்காய் 200 ரூபாய்க்கும், மல்லி இலை ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைய வாய்ப்பில்லை

காந்திபுரம் 8ம் நம்பர் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'பொதுவாக மழைக்காலத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் உற்பத்தி குறைந்து விலை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை மாற்ற காய்கறியும் விலை அதிகரித்துள்ளது. ஜூன் முழுவதும் விலை குறைய வாய்ப்பு இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை