கோவை;பள்ளிகளில் 'கூல் லிப்', 'இ-சிகரெட்' போதை பொருள் பயன்பாடு தலைதுாக்குவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி, 'கவுன்சிலிங்' வாயிலாக மாணவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை, போலீசார் தீவிரப்படுத்திஉள்ளனர்.கோவை மாவட்டத்தில், 1,210 அரசு, 177 அரசு உதவிபெறும் மற்றும், 665 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தற்போது, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை அதிகம் நடக்கிறது.குறிப்பாக, 'கூல் லிப்' போதை பொருளை, உதடு அல்லது நாக்கின் அடியில் வைத்துக் கொண்டால், சில வினாடிகளில் போதை உண்டாக்குகிறது. மிகக் குறைந்த விலையில் இப்பொருள் கிடைப்பதால் மாணவர்கள் அதிகம் வாங்குகின்றனர்.புற்றுநோயை உண்டாக்கும் தன்மை, இந்த 'கூல் லிப்'புக்கு உண்டு. அதேபோல், தடை செய்யப்பட்ட புகை பொருட்கள் பயன்பாடும் மாணவர்களிடம் காணப்படுகிறது.பள்ளிகளில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் இருந்தும், மாணவர்களை குறிவைத்து விற்பது நடக்கிறது.தற்போது, இளைஞர்களை கவரும் வகையில், 'ஸ்டைல்' ஆன தோற்றத்தில் இருக்கும் 'இ-சிகரெட்' புதிய போதை பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 'இ-சிகரெட்' விற்பனையை, 2019ல் மத்திய அரசு தடை செய்தது.ஆனால், இணையதளங்களிலும் இதன் விற்பனை நடப்பதால் போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களிடம் இதை தடுக்க தலைமையாசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.போலீசாரும் அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று இக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் பயன்பாடு தலைதுாக்காது இருக்க, தலைமையாசிரியர்களுடன் கூட்டம் நடத்தி, மாநகர போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர்.
ஒரு மாதம் 'டார்கெட்'
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாட்டை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளோம். இருப்பினும் சில புகார்கள் வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களிடம் 'கூல் லிப்' பயன்பாடும், தனியார் பள்ளி மாணவர்களிடம்'இ-சிகரெட்' பயன்பாடும் காணப்படுகிறது.எனவே, 100 சதவீதம் போதை பொருள் பயன்பாடில்லா பள்ளிகளை உருவாக்கும் நோக்கில் ஒரு மாதம் 'டார்கெட்' நிர்ணயித்து நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் விரைவில் கூட்டம் நடத்த உள்ளோம். போதை பொருள் பயன்படுத்தும் மாணவர்களை, ஆசிரியர்கள் வாயிலாக கண்டறிந்து கவுன்சிலிங் வழங்குவதுடன், இப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.