உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெல்டா பாசனத்துக்காக கல்லணையில்  தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில்  தண்ணீர் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக, 28ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மயானுார், முக்கொம்பு அணை வழியாக நேற்று அதிகாலை கல்லணைக்கு வந்தது.இதையடுத்து, நேற்று கல்லணையில் உள்ள காவிரி அன்னை, அகத்தியர், கரிகாலச்சோழன், சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் மற்றும் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, மங்கல வாத்தியம் முழங்க அமைச்சர்கள் நேரு, மகேஷ், ராஜா, மெய்யநாதன், எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று, பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகளில் மலர்கள் துாவி விவசாயம் செழிக்க வேண்டியபடி தண்ணீரை திறந்து வைத்தனர்.இதன்படி, முதல் கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாறு 1,000 கன அடி, கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டன.மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தளாடியில், 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம்

பிறகு அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக முதல்வர் அவரது விருப்பத்தை கூறுகிறார். மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் விடமாட்டோம். கர்நாடகாவில், எவ்வளவு தண்ணீர் வந்தாலும், நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை நிறுத்தி விட்டு, கடலில் தான் விடுகின்றனர்.காவிரியில் நம் உரிமையை கேட்கிறோம். அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டார். மத்திய அரசும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கவில்லை என கூறியுள்ளது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீரானது குறுவை சாகுபடிக்கும், சம்பாவுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தண்ணீரை எல்லா ஆறுகள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் ஒரு நாளும் அணையில் இருந்து திறப்பது நிறுத்தப்படாது. விவசாயிகளுக்கு பயிர்கடன் தேவையான அளவு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரிடம் ஆவேசம்

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீரை திறக்க வேண்டும். பல இடங்களில் கட்டுமான பணிகள் நடப்பதால் தண்ணீரை குறைத்து திறந்து விடுகின்றனர். இப்போது தான் கல்லணையில் கூட பல பணிகளை செய்கின்றனர் என ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீரை சேமியுங்கள்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாண்டியன்:மேட்டூர் அணை, 120 அடி கொள்ளளவு நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது முழுமையும் கடலிலே சென்று கலக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, கிடைக்கும் தண்ணீரை ஏரி,குளம் குட்டைகளுக்கு பாதுகாப்பான வழியில், நிரப்பிட தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். குறுவைக்கு தொகுப்பு திட்டம் வழங்குவது போல் சம்பா தொகுப்பு திட்டம் வழங்கிட வேண்டும். உபரிநீர் கடலிலே கடப்பதை தடுத்து நிறுத்துவதற்கு ராசி மணலில்,தமிழக அரசு அணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ராசிமணல் அணை கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Swaminathan L
ஆக 01, 2024 11:04

ராசி மணல் அணைத் திட்டம் காமராஜர் காலத்திலிருந்தே பேசுபொருளாக இருந்ததெனில் ஏன் அதற்கப்புறம் ஏறக்குறைய அறுபது வருடங்கள் தமிழக அரசுகளோ, எந்த ஒரு அரசியல் கட்சியுமோ அதைக் கட்டுவதற்கு முனைப்போ, நடவடிக்கையோ எடுக்கவில்லை? ஆகஸ்ட் மாதத்திற்கு 46 டிஎம்ஸி நீர் அனுப்ப வேண்டுமென்றால், கர்நாடகம் கடும் மழை தொடர்ந்தால் அனுப்பலாம். அது உபரிநீர், சட்டப்படி தர வேண்டிய நீர் அல்ல என்று இங்கே ஆட்சேபம் தெரிவிப்பது ஏன்? வரும் நீர் உபரிநீராயிருந்தாலும் கணக்குப்படி வரும் நீர் தானே?


Kasimani Baskaran
ஆக 01, 2024 05:31

தமிழக அரசுக்கு அணை கட்டுமளவுக்கு நிதி ஆதாரம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை எளிதில் சாப்பிடும் வகையில் லாவகமாக பயன்படுத்தி விடுவார்கள் - உதாரணத்துக்கு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் கோடிகளை விழுங்கும் கூவம் மறுசீரமைப்புத்திட்டம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை