| ADDED : மே 03, 2024 11:03 PM
அன்னுார்:டெங்கு கொசு ஒழிப்புக்கு, அன்னுாரில் 20 பேர் உள்பட மாவட்டத்தில், 240 பேரை நியமிக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பொது இடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை, அன்னூர், சர்க்கார் சாமக்குளம், சூலூர் உள்பட 12 ஒன்றியங்களிலும், தலா 20 பேர் வீதம் 240 பேர் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட பணியாளர்கள் அந்த ஊராட்சிகளில் பணிபுரிவதை சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.