உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முடங்கிய மூன்றாவது கண்! குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் சிக்கல்

முடங்கிய மூன்றாவது கண்! குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் சிக்கல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், போக்குவரத்தை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும் பொருத்தப்பட்ட, கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு பகுதிகளில் செயல்படாமல் உள்ளது. இதனால், கண்காணிப்பில் குந்தகம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், விவசாய செழிப்பு மிக்க பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. தென்னை சார்ந்த பல்வேறு தொழில்கள் நிறைந்துள்ளன. கேரள மாநில எல்லையில் உள்ளதால், முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1.35 லட்சம் மக்கள் தொகையை பொள்ளாச்சி கொண்டுள்ளது.முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பொள்ளாச்சியை கடந்து செல்ல வேண்டும் என்பதால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.வளர்ந்து வரும் பொள்ளாச்சியின் உட்கட்டமைப்புக்கு, யாரும் அக்கறை காட்டப்படவில்லை என்பதே உண்மை. நகரின் பாதுகாப்பு சமீபகாலமாக கேள்விக்குறியாகி உள்ளது.வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை - பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட பின் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலால், முக்கிய ரோடுகளில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன.போக்குவரத்து விதி மீறல்களான, ஒரு வழிப்பாதையில் செல்வது, 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், சிக்னல்களில் நிற்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாதது, உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. இவற்றைபோலீசார் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.இது ஒருபுறம் இருக்க,முக்கிய ரோடுகள், சந்திப்புகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். அவைகட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டன.ஆனால், தற்போது, இந்த கேமராக்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. பல இடங்களில் கேமராக்கள் திசை மாறியும், உடைந்தும், பயன்பாடின்றி காணப்படுகின்றன. சில இடங்களில் கேமராக்களே இல்லை. கேமரா பொருத்தப்பட்ட பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனால், குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பெரிதும் உதவுகின்றன. போலீசார், பொதுமக்கள் வீடுகள், நிறுவனங்களில் கேமராக்களை நிறுவ அறிவுறுத்துகின்றனர்.ஆனால், போலீசார் நிறுவிய கேமராக்களை பராமரிக்க கூட அவர்களுக்கு நேரம் இல்லை. பயன்பாடு இல்லாத கேமராக்களுக்கு மாற்றாக, புதிய கேமரா அமைக்க வேண்டும். அனைத்து கேமராக்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், ''கோவை மாவட்டம் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் தேவை குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது. இதுதவிர, ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை பராமரிப்பு செய்ய தேவையான நிதி குறித்தும், மாற்று கேமரா நிறுவவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதை, போலீஸ் நிதி மற்றும் தனியார் பங்களிப்பு வாயிலாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கேமராக்களையும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி