ஸ்துாபியை சீரமைக்கணும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி நினைவு ஸ்துாபி உள்ளது. இதன் வளாகத்தில் பராமரிப்பின்றி பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றை அகற்றி சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவக்குமார், உடுமலை. எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, காந்திநகர் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.- சக்தி, உடுமலை. கொசுத்தொல்லை அதிகரிப்பு
உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கப்பாதையில் பயன்படுத்த முடியாமல் கழிவுகள் நிறைந்துள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகளில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுகளை சுத்தம் செய்வதற்கும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை. கழிவுகளை அகற்றணும்
உடுமலை பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. குப்பை, பிளாஸ்டிக் நிறைந்துள்ளது. அவற்றை துார்வாரி கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை. வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, தாராபுரம் ரோடு சிவசக்தி காலனி அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. மாலை நேரங்களில் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. ரோட்டை கடப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.- பவானி, உடுமலை. பராமரிப்பு இல்லை
உடுமலை, நேதாஜி மைதானத்தில் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் முறையில் இல்லாமல் மைதானத்தில் முள்செடிகள் அதிகமாக படர்ந்துள்ளது. குழந்தைகள் விளையாடும் இடங்களும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.- ராஜேஸ்வரி, உடுமலை. புதர் அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே உள்ள மலசர்பதி செல்லும் ரோட்டின் இருபுறமும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேர பைக் ஓட்டுநர்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர புதரை அகற்றம் செய்ய வேண்டும்.-- -கண்ணன், கிணத்துக்கடவு. கதவு சேதம்
கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கதவுகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் தெருநாய்கள் உள்ளே செல்கின்றன. எனவே, அங்கன்வாடி பணியாளர்கள் கவனித்து கதவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ரகு, கிணத்துக்கடவு. நடைபாதை சுத்தமாகுமா?
பொள்ளாச்சி, சுரங்க நடைபாதையை பயன்படுத்தும் மக்கள் சிலர், சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுச்சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சுத்தம் செய்து, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.-- -மஜீத், பொள்ளாச்சி. ரோடு அமைக்கப்படுமா?
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் முதல் பட்டணம் வரையான ரோடு, சிதிலமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- -கணேசன், பட்டணம். வீணாகும் மின்சாரம்
பொள்ளாச்சி, சி.டி.சி., மேடு பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பகல் நேரத்தில் ஒளிர்கிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதை நகராட்சி நிர்வாகமோ அல்லது மின் வாரிய அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதை சரி செய்ய வேண்டும்.- -பெருமாள், பொள்ளாச்சி.