பொள்ளாச்சி;நகரில், நிழற்கூரை இல்லாத பஸ் ஸ்டாப்களில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, வேன், ஆட்டோ, கார், பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இதனால், முக்கிய வழித்தடங்கள் மட்டுமின்றி, குறுக்கு வீதிகளிலும் நெரிசல் காணப்படுகிறது.உடுமலை ரோடு, திருப்பூர் ரோடு, கோவை ரோடு, பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள், வெளியூர்களை பொள்ளாச்சியுடன் இணைக்கும் வகையில் உள்ளன.இந்த ரோடுகளில், முக்கிய பகுதிகளில், அதிகப்படியான பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை இல்லை. சில இடங்களில் மட்டும் பெயரளவில் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.நிழற்கூரை மற்றும் இருக்கை வசதி இல்லாததால், பஸ் கிடைத்தால் போதும் என்ற நிலையில் அருகிலுள்ள கடைகளில் அனுமதி கேட்டு, படிக்கட்டுகளில் காத்திருக்கும் நிலை பயணியருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு காணப்படும் இடங்களில், மரநிழலும் இருப்பதில்லை. மக்கள், மழை மற்றும் வெயிலின்போது, கடும் பாதிப்பு அடைகின்றனர்.மக்கள் கூறுகையில், 'தொழில் நிமித்தமாக, தினமும், பலர், நகருக்கு வந்து செல்கின்றனர். பல பஸ் ஸ்டாப்புகளில் நின்று அந்தந்த வழித்தட பஸ்களில் செல்ல முற்படுகின்றனர். ஆனால், மழை மற்றும் வெயிலின்போது, ஒதுங்க இடம் கிடையாது. பஸ் ஸ்டாப்புகளில் நிழற்கூரை அமைக்க வேணடும்,' என்றனர்.