பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர் முழுவதும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சொந்தமான கம்பங்கள், பராமரிப்பின்றி தாவரங்களின் கொடி படர்ந்து காணப்படுகிறது.பொள்ளாச்சி நகரில், மின்கம்பங்களை ஒட்டி, பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் தொலைத் தொடர்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பல இடங்களில், மின் இணைப்பு கம்பிகளை உரசியவாறும், குறுக்கேயும் தொலைத் தொடர்பு கேபிள்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மின் இணைப்பு பாதிப்பு ஏற்படும்போது, மின் கம்பங்களில் பழுது நீக்க முடியாமல், மின் ஊழியர்கள் பாதிக்கின்றனர். குறிப்பாக, ஆங்காங்கே பி.எஸ்.என்.எல்., இணைப்புக்காக நடப்பட்ட கம்பங்கள் சாய்ந்தும், கீழே விழும் நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது.நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றில் தாவரங்களின் கொடி, மின் இணைப்பு கம்பிகளை நோக்கி படர்ந்து வருகிறது. இவ்வழித்தடத்தில், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில், பல இடங்களில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. துவக்க காலங்களில், மக்களிடையே தரைவழி போன் பயன்பாடு இருந்த நிலையில், இந்த கம்பங்கள் வாயிலாக கேபிள் இணைப்பு வழங்கப்பட்டது.தற்போது, 'ஸ்மார்ட்போன்' பயன்பாடு காரணமாக, தரைவழி போன் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. 'டேட்டா' சேவை பயன்பாடு மட்டுமே உள்ளதால், பி.எஸ்.என்.என்., கம்பங்கள் பராமரிப்பும் தொய்வடைந்துள்ளது.சில இடங்களில், கம்பங்களின் உறுதித்தன்மை பலவீனமடைந்து வருவதால், அவைகளை அகற்றி மாற்றவோ, அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.