தொண்டாமுத்தூர் : ஆடிப்பெருக்கையொட்டி, புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள், படித்துறையில் உள்ள கன்னிமார் கோவிலில், புதிய தாலி சரடு மாற்றி, வழிபாடு செய்தனர். சமீபத்தில் திருமணமான புதிய தம்பதிகள், தங்களின் திருமண மாலைகளை ஆற்று நீரில் விட்டு வழிபட்டனர். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமானவர்கள் குழந்தை வரம் வேண்டியும், கன்னிமார்களை வழிபட்டனர்.உயிரிழந்த குழந்தைகள், திருமணம் ஆகாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், ஏழு கற்களை வைத்து சப்த கன்னிமார்களாக பாவித்து, வாழை இலை விரித்து, அதில், தாழை மடல், புதிய துணி, பூக்கள், உணவு, இனிப்பு வகைகள், காதோலை, கருகுமணி, பழங்கள் வைத்து படையல் படைத்து, தீபமேற்றி வழிபாடு செய்தனர். அதன்பின், பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து வழிபாடு நடத்தி சென்றனர். இந்தாண்டு, ஆற்றில் நீர் வரத்து இருந்ததால், படித்துறையில் நின்றே, பொதுமக்கள் வழிபாடுகளை செய்தனர்.ஆடிப்பெருக்கையொட்டி, ஒரு கட்டு அகத்திக்கீரை, 20 ரூபாய்க்கும், 7 கூழாங்கற்கள், 20 ரூபாய்க்கும், தாழைமடல், 30 ரூபாய்க்கும், வாழை இலை, 10 ரூபாய்க்கும், காதோலை, கருகுமணி பெட்டி, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர்.அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள ஆறு, வாய்க்கால், குளம் போன்ற நீர்நிலைகளிலும், பொதுமக்கள் படையல் வைத்து, குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.