| ADDED : ஜூன் 01, 2024 12:30 AM
கோவை;கோவை மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணைகளில் படிந்துள்ள வண்டல் மண்/ மண் போன்ற சிறு கனிமங்களை, வேளாண் நோக்கத்துக்காக, வெட்டி எடுத்துச் செல்ல, விவசாயிகள் விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் தாலுகா, இரும்பறை கிராமத்தில், கீழ்பவானி அணை நீர்ப்பரப்பு பகுதியில் வேர்த்துறை, அணைத்துறை, மயில்மொக்கை, இச்சிப்பாழி ஆகிய இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.இதில், வேர்த்துறையில், ஏழு லட்சத்து, 88 ஆயிரத்து, 500 கன மீட்டர்; அணைத்துறையில், ஆறு லட்சத்து, 84 ஆயிரம் கன மீட்டர்; மயில்மொக்கையில், எட்டு லட்சத்து, 40 ஆயிரம் கன மீட்டர்; இச்சிப்பாழியில், ஏழு லட்சத்து, 15 ஆயிரம் கன மீட்டர் அளவு வெட்டியெடுக்க அனுமதிக்கப்படும்.விவசாய நோக்கத்துக்காக, இந்த இடங்களில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.