உடுமலை : துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், உடலியல் மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த வகுப்புகள், தொடர்ச்சியாக இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.வீட்டிலிருந்து, குழந்தைகள் பள்ளிக்குச்சென்று மீண்டும் மாலையில் திரும்புவதற்குள், அவர்களின் பாதுகாப்பு குறித்து, பெற்றோர் பதட்டமுடன் இருக்க வேண்டிய நிலையாக இன்றைய சூழல் உள்ளது.குறிப்பாக துவக்க, நடுநிலை வகுப்பு அளவில் இருக்கும் பெண் குழந்தைகளின் மீது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனாலும் அந்த குழந்தைகளைச்சுற்றி இருக்கும் வட்டத்தினர், பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.பல வீடுகளில், பெற்றோர் இருவரும் பணிக்குச்செல்லும் சூழல் இருப்பதால், பலரையும் நம்பி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் விடுவதும், அருகில் விளையாடவும் அனுப்புகின்றனர்.துவக்க, நடுநிலை வகுப்புகளில் உள்ள குழந்தைகள் நல்லவை, தீயவை உணராத இளம் பிஞ்சுகளாக இருப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெற்றோர் மட்டுமின்றி, பள்ளி நிர்வாகத்தினரின் முதல் கடமையாகவும் உள்ளது.குழந்தைகளுக்கு உடலியல் சார்ந்த மாற்றங்கள், நல்லதொடுதல், தீய தொடுதல் குறித்த விழிப்புணர்வு பெண் குழந்தைகள் மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கும் அவசியமானதாகிறது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:எங்கள் பள்ளியில், நாங்கள் தொடர்ந்து குழந்தைகளிடம் நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.இதுதவிர, ஆண் குழந்தைகளுக்கும் தனியாக மொபைல் போன் பயன்பாட்டில் ஏற்படும் விபரீதங்கள், தீய பழக்கங்கள் குறித்து தொடர்ந்து அவர்களை அறிவுறுத்துகிறோம். ஆனால் அனைத்து பள்ளிகளிலும் இது நடக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.இதற்கு கல்வித்துறைதான் ஒரு வழி துவக்க வேண்டும். இதுபோன்ற சிறப்பு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். வழக்கமான வகுப்புகளாக இல்லாமல், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். கல்வித்துறை இதற்கு நடவடிக்கை எடுப்பதால், பெற்றோரிடமும் அதிக வரவேற்பு இருக்கும்.இவ்வாறு,தெரிவித்தனர்.