கோவை;வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்கும் பணியில், டிரோன்களை ஈடுபடுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று, அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமானோர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வர். ஆண்டுதோறும், பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதையடுத்து பூண்டி மலைக்கு பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். தற்போது வெய்யிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்கள் கண்காணிக்கவும் டிரோன்களை பயன்படுத்த, வனத்துறை திட்டமிட்டுள்ளது.காட்டுத்தீயை தடுக்க சமீபத்தில், டிரோன் வாங்கப்பட்டுள்ளது. ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க, இது பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கவும், அவசர காலங்களில், அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும், டிரோன்களை பயன்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.-ஜெயராஜ், மாவட்ட வனத்துறை அலுவலர்.