| ADDED : ஆக 03, 2024 02:07 AM
போத்தனுார்:கோவை, மயிலேறிபாளையம் செல்லும் வழியில், வரத்தோப்பு உள்ளது. நேற்று மதியம் இங்குள்ள பண்ணை வீடு ஒன்றின் அருகே வந்த காரில் இருந்தவர்கள் இறங்கி, தங்களுடன் வந்த ஒருவரை ஆயுதத்தால் வெட்டினர். வெட்டுப்பட்டவர் சத்தமிடவும், பண்ணை வீட்டிலிருந்தோர் கார் அருகே ஓடி வந்தனர். இதை கண்ட அக்கும்பல் காரில் தப்பியது. வெட்டுபட்டவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டனர். கொலையாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணை குறித்து, போலீசார் கூறியதாவது:உயிரிழந்தது சரவணம்பட்டி, செந்தோட்டம், காடைஈஸ்வரர்கார்டனைச் சேர்ந்த வக்கீல் உதயகுமார், 48, என்றும், இவரது மனைவி நித்யவள்ளி, கோவில்பாளையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிகிறார்.நேற்று உதயகுமார், தன் மனைவியிடம், பொள்ளாச்சி செல்வதாக கூறி தன் காரில் சென்றார். உடன் பயணித்த நான்கிற்கும் மேற்பட்டோர், இவரை அழைத்துச் சென்று, வழியில் கொலை செய்துள்ளனர். அவரது காரிலேயே தப்பிச் சென்றுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.