| ADDED : ஜூலை 07, 2024 01:41 AM
கோவை:''கோவை ரயில்வே ஸ்டேஷனில் விரைவில் 'ப்ரி பெய்டு' ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.தலைமை வகித்த, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:நடப்பாண்டு, மொபைல்போன் திருட்டு குறித்து, 45 வழக்குகள் பதியப்பட்டு, 40 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.200 மொபைல்போன்கள் கைப்பற்றப்பட வேண்டியுள்ளது. ஒரு சில மொபைல்போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண் மாற்றமும் நடக்கிறது. அவை பிரத்யேக விசாரணை வாயிலாக கண்டறியப்படும். இவ்வாறு திருடப்படும் மொபைல்போன்கள், சைபர் குற்றங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூகவலைதளங்களில் அவதுாறு கருத்துக்கள் பரப்ப பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சமீபத்தில், 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால், கடந்த ஒரு சில மாதங்களாக பைக்குகள் திருட்டு, குறைந்துள்ளது. கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோக்கள் பிரச்னையை சமாளிக்க, 'ப்ரீ பெய்டு' ஆட்டோ நடைமுறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, கண்டறியப்பட்ட மொபைல்போன்களை கமிஷனர் பாலகிருஷ்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். கோவை மாநகர போலீஸ் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், ஸ்டாலின், சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.