உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., கூடைப்பந்து போட்டிகள் தேசியளவில் கோவையில் நாளை துவக்கம்

பி.எஸ்.ஜி., கூடைப்பந்து போட்டிகள் தேசியளவில் கோவையில் நாளை துவக்கம்

கோவை, -பி.எஸ்.ஜி., கோப்பை ஆண்கள் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நாளை முதல், வரும், 13ம் தேதி வரை நடக்கின்றன.பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த, 57 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள், கோவையில் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, 58வது கூடைப்பந்து போட்டிகள் நாளை(ஆக., 9) முதல், வரும், 13ம் தேதி வரை, நடக்கின்றன. போட்டிகள், கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளன. அகில இந்திய அளவில் மிகச்சிறந்த, 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரு பகுதிகளாக பிரிக்கப்படும். முதல் மூன்று நாட்கள். சுழற்சி முறையில் நடக்கும். தொடர்ந்து. முதல் இரு இடங்கள் பெறும் அணிகள், அரையிறுதியில் போட்டியிடும். வெற்றி பெறும் அணிகள், இறுதி போட்டியில் மோதும்.'ஏ' பிரிவில் சென்னை -வருமான வரித்துறை, சென்னை இந்தியன் வங்கி, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா, டில்லி மத்திய செயலக அணிகள், 'பி' பிரிவில் டில்லி, இந்திய ராணுவம், டில்லி- இந்தியன் ரயில்வே, கேரள மாநில மின்சார வாரியம், சென்னை லயோலா கல்லூரி அணிகள் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் ஆறு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக, ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி., சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக, ரூ.50 ஆயிரம், மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், வழங்கப்படும். சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். போட்டிகள் தினமும் மாலை 5:00 மணிக்கு துவங்கும். கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துவக்கி வைக்க உள்ளார். ஆக., 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. கலெக்டர் கிராந்திகுமார் பரிசுகளை வழங்குகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் ருத்ர மூர்த்தி மற்றும் செயலாளர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை