கோவை;மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ராமகிருஷ்ணா மில்ஸ் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பை'க்கான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், மாவட்டத்தின் பல்வேறு மைதானங்களில் நடந்தன.இதில் நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் மற்றும் சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி ஹரி நிஷாந்த் (77), சத்யநாராயணன் (41), மான் பாப்னா (42), அபிஷேக் தன்வர் (52*) ஆகியோரின் பங்களிப்பால், 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.பின்னர் விளையாடிய சூர்யபாலா அணியினர், நிலைத்து விளையாட தவறினர். கீதை நாதன் தன் பங்கிற்கு 34 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.இதனால், அந்த அணி 36 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராமகிருஷ்ணா அணி சார்பில் அபிஷேக் தன்வர் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த, மற்றொரு போட்டியில் கோவை நைட்ஸ் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியை வீழ்த்தியது.முதலில் விளையாடிய கோவை நைட்ஸ் அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. அணிக்காக கிஷோர் (93), கார்த்திக் சங்கர் (46) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர்.வெற்றிக்கு 240 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய, ஆர்.கே.எஸ்., அணி வீரர்களை ஸ்ரீ நிரஞ்சன் (3 விக்கெட்), செல்வகுமரன் (3 விக்கெட்) தங்களின் திறமையான பந்து வீச்சால் கட்டுப்படுத்தினர்.இதனால், ஆர்.கே.எஸ்., அணியினரால் 41 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்.கே.எஸ்., அணியின் சந்தோஷ் (33) ஆறுதல் அளித்தார்.