பொள்ளாச்சி:மாநகராட்சியைப் போல, நகராட்சி, பேரூராட்சிகளிலும் வெளியே அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் கழுத்து பட்டை, வாய்க்கு முகமூடி அணிவிக்க, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், எந்த வகை வளர்ப்பு நாயாக இருந்தாலும், தரமான கழுத்துப்பட்டை அல்லது தோள்பட்டை அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும். அப்போது, வாய்க்கு முகமூடி அணிவிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சி மட்டுமின்றி, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குடியிருப்புகளில், செல்லப் பிராணியாக, வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற வளர்ப்பு நாய்களை வளர்த்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், உரிமம் பெறாமல் நாய் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில், குடியிருப்பு பகுதிகளில்,நாய்களை 'வாக்கிங்' அழைத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களிலும், அவைகளின் செயல்பாடு, மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.எனவே, பெருநகரங்களைப் போல், இப்பகுதியிலும் கட்டுப்பாடு விதிக்க உள்ளாட்சி அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். வெளியே அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் கழுத்து பட்டை, வாய்க்கு முகமூடி அணிவிக்க வேண்டும். ரோட்டில் சுற்றும் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களால் இடையூறு ஏற்பட்டால் தெரிவிப்பதற்கு, 'வாட்ஸ்ஆப்' எண் வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.