கோவை:கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, பொதுக் கலந்தாய்வு நேற்று நடந்தது. இங்கு ஐந்து பாட பிரிவுகளில் உள்ள, 240 இடங்களுக்கு, 6154 விண்ணப்பங்கள் வந்திருந்தன. நேற்று பி.காம் பாட பிரிவில், 60 இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது.இந்த பாட பிரிவுக்கு மட்டும், 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். 400 முதல் 250 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவிகள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 300 கட்-ஆப் மதிப்பெண்கள் வரை பெற்ற 56 மாணவிகள், இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை பெற்றனர். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கான நான்கு இடங்களும் நிரம்பின. பி.எஸ்சி., கணினி அறிவியல் பிரிவு மற்றும் பி.எஸ்சி., கணித பிரிவுகளுக்கும் கலந்தாய்வு இன்று நடக்கிறது. நாளை பி.ஏ., ஆங்கிலம், வரும் 14ம் தேதி இளங்கலை தமிழ் பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில், ''இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் நீலகிரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.இங்கு மாணவிகள் தங்கி படிக்க, விடுதி வசதி இல்லாதது ஒரு குறையாக உள்ளது. ''வெளியில் தங்கி படித்தால், செலவு அதிகமாகிறது என்பதால், பிற மாவட்ட மாணவிகள், இங்கு இடம் கிடைத்தாலும் சேர்வதில்லை,'' என்றார்.