கோவை:கோவை வேளாண் பல்கலையில், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் ஐ.சி.ஏ.ஆர்.,ன் இந்திய எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், காரிப் எண்ணெய் வித்துகள் குழுவின் வருடாந்திர இரண்டு நாள் கருத்தரங்கு, நேற்று துவங்கியது.இதில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ஐ.சி.ஏ.ஆர்.,) உதவி தலைமை இயக்குனர் (எண்ணெய் வித்துகள் மற்றும் பயறு) பேசியதாவது:எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 4வது இடம் வகிக்கிறது. கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தன்னிறைவு அடையவில்லை.ஆண்டுக்கு 1.75 கோடி டன் இறக்குமதி செய்கிறோம். நமது தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். 2047ல், அனைத்து வேளாண் விளைபொருட்களிலும் தன்னிறைவு என்ற இலக்கில், எண்ணெய் வித்து உற்பத்தியும் தன்னிறைவு அடையும் என நம்புகிறோம். கடந்த ஆண்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, சாதனை அளவாக 4.1 கோடி டன்னை எட்டியது.இவ்வாறு, அவர் பேசினார்.ஐ.சி.ஏ.ஆர்., இணை தலைமை இயக்குனர் ஷர்மா தலைமை வகித்து பேசியதாவது:எள், சூரியகாந்தி, ஆமணக்கு, பேய் எள்ளு ஆகிய நான்கும் எண்ணெய் வித்துகளில் முதன்மையானவை. உற்பத்தி அதிகரித்திருந்தாலும் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை. சாகுபடி பரப்பு குறைந்து கொண்டு வருகிறது.சமையல் எண்ணெய் நுகர்வில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா உள்ளிட்ட பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது. எண்ணெய் வித்துகள் மேம்பாட்டுக்கு, இந்திய அரசு போதுமான நிதி ஒதுக்கியுள்ளது.ஆண்டுக்கு ஓரிரு புது ரகங்களை அறிமுகம் செய்தாலும், அவை மெச்சத்தகுந்ததாக இல்லை. காட்டு இனங்களை ஆய்வு செய்து, நோய், பூச்சி எதிர்ப்பு மிக்க புதிய ரகங்களை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிகள், ஜீன் மேப்பிங், ஜெர்ம் பிளாசம் உட்பட அனைத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ரகங்களைக் கண்டறிய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமி பேசியதாவது:தமிழகத்தில் 17 ஆற்றுப்படுகைகள் உள்ளன. நெல்லுக்குப் பிறகு பயறு வகைகளை சாகுபடி செய்வதற்குப் பதில், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்வது உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக சாகுபடி பரப்பை அதிகரிக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.சூரியகாந்தியில் 28 ரகங்கள், எள்ளில் 96 ரகங்கள், பேய் எள்ளில் 25 ரகங்கள், ஆமணக்கில் 55 ரகங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆமணக்கில் முதல் கலப்பினம் இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டது. இந்த எண்ணெய் வித்துகளில் குறுகிய கால சாகுபடி ரகங்களை உருவாக்குவது முக்கியமானது. அப்போதுதான் பருவகால இடர்களை எதிர்கொள்ள இயலும்.வி.ஆர்.ஐ.-5 ரகம் முற்றிலும் இயந்திரமயமாக்கலுக்கு ஏற்றது. அடர் நடவு, துல்லிய வேளாண்மை, பூஸ்டர், பிரத்யேக உரமிடல், ஏ.ஐ. தொழில்நுட்பம், ஹெக்டருக்கு ரூ.2.56 லட்சம் குறைந்தபட்ச வருவாய் திட்டம், தனியார்-பொது பங்களிப்பில் புதிய ரகங்கள் உருவாக்கல் போன்ற, பல்வேறு செயல்களின் வாயிலாக எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க, வேளாண் பல்கலை முயற்சி எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மாத்தூர், திட்ட ஒருங்கிணைப்பாளர் (எள் மற்றும் பேய் எள்) ஆனந்த் விஸ்வகர்மா, ஐ.சி.ஏ.ஆர்., உதவி தலைமை இயக்குனர் (விதைகள்) யாதவா உட்பட விஞ்ஞானிகள், பல்கலை துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.