உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் நிரூபிக்க நான்கு இடங்களில் கருத்தரங்கு

சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் நிரூபிக்க நான்கு இடங்களில் கருத்தரங்கு

தொண்டாமுத்தூர்;காவேரி கூக்குரல் சார்பில், சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் கருத்தரங்கு நடத்த, காவேரி கூக்குரல் இயக்கம் முடிவு செய்துள்ளது.இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என, பெரும்பாலான விவசாயிகள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை, எங்கள் கள அனுபவத்தில் கண்டறிந்துள்ளோம்.புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை, சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.சில விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு, 6 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர். சில விவசாயிகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இதையெல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு, காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை, கடந்த ஏழு ஆண்டுகளாக அளித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வரும் 28ம் தேதி, தமிழ்நாட்டில் ஒரே நாளில், கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் என, நான்கு இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கு நடத்த உள்ளோம்.இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பது முதல் ஏற்றுமதி வாய்ப்புகள் வரை, அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேச உள்ளனர்.இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், 94425 90081, 944259 0079 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ