| ADDED : ஏப் 27, 2024 02:32 AM
கோவை:நகைப்பட்டறை உரிமையாளரை அரிவாளால் வெட்டி, 33.75 பவுன் நகையை கொள்ளையடித்த ஊழியரை, நண்பருடன் போலீசார் கைது செய்தனர்.கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; வீட்டின் மாடியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த திங்கள் இரவு ராஜேந்திரன், 270 கிராம் (33.75 பவுன்) தங்கத்தை எடுத்துக் கொண்டு, ஊழியர் சாந்தகுமார் என்பவருடன் பைக்கில், செல்வபுரத்தில் இருந்து காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றார். செல்வ சிந்தாமணி குளம் அருகே பின்னால் வந்த கார் மோதியது.காரில் இருந்து இறங்கிய, 4 பேர் கும்பல் ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை அரிவாளால் வெட்டி, ராஜேந்திரனிடம் இருந்த நகை பையை பறித்து தப்பியது. ராஜேந்திரன் புகாரின் படி செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். கொள்ளையில் ஈடுபட்டது, ராஜேந்திரனிடம் பணிபுரிந்து வந்த செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த நவநீதன், 48, மற்றும் அவரது நண்பர் ராஜீவ்காந்தி வீதியை சேர்ந்த பாலகுரு, 38, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.