முதியோர்களுக்கு எலும்பு தேய்மானம் என்பது, பல நுாற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு, தற்போது நல்ல தீர்வு கிடைத்து வருகிறது.என்ன செய்ய வேண்டும்...என்ன செய்யக் கூடாது? விளக்குகிறார் சித்த மருத்துவர் ஸ்ரீகாந்த்.அவர் கூறியதாவது:பொதுவாக, 50, 60 வயதுகளில் முழங்கால் மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது. இதற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் கால் வளைதல், சாய்ந்து நடப்பது போன்ற பிரச்னைகள் வரும்.இதனால் மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது, தரையில் அமர்ந்து எழுவது, நடப்பதில் சிரமம் ஏற்படும். உடல் எடை, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, 50 வயதில் மூட்டு தேய்மானத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது.துவக்கத்திலேயே டாக்டரை அணுகி விட்டால், அறுவை சிகிச்சை தேவைப் படாது. சித்த மருத்துவத்தில் வெளிப்பூச்சு மருந்து, எண்ணெய் பசை குறைதலுக்கு ஆயில் பயன்படுத்துவது மூலம், முழங்கால் மூட்டு வலிக்கு தீர்வு காணலாம். கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானம்
அடுத்தப்படியாக முதியோருக்கு ஏற்படும் பிரச்னை கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானம். இது அதிக எடை துாக்கி பணிபுரிபவர்களுக்கும் ஏற்படும். அதிக நேரம், அதிக துாரம் பயணம் செய்பவர்களுக்கு, கழுத்து எழும்பு தேய்மானம் ஏற்படுகிறது.இதனால் கழுத்தை திருப்பும் போது வலி ஏற்படும். இந்த வலி கைகளுக்கு பரவி கை வலி, விரல் மரமரப்பு ஏற்படும். இடுப்பு எலும்பு தேய்மானத்தால் இடுப்பு வலி, கால்களுக்கு பரவி கால் வலி, கால் விரல் மரமரப்பு ஏற்படும். 50, 60 வயதிற்கு பின், 75 சதவீதம் பேருக்கு, இந்த பாதிப்பு வருகிறது.இதற்கு தீர்வு, தலையணையை உயரமாக வைக்கக்கூடாது, படுக்கையை சமமாக விரித்து படுக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுவது, நீண்ட துாரம் பயணத்தை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, சித்தா சிகிச்சையால் இந்த பிரச்னையை கட்டுப்படுத்தலாம். தோள்பட்டை வலி
சர்க்கரை நோய் உள்ள, 70 சதவீதம் முதியோர்களுக்கு எண்ணெய் பசை குறைந்து தோள்பட்டை வலி வருகிறது. இதனால் குளித்து தலையை துவட்டுவது, சட்டை அணிவது, கைகளை பின்னால் கொண்டு போக முடியாமல், வலி ஏற்படும்.14 முதல், 21 நாட்களில் இதற்கு முழுமையாக தீர்வு காண முடியும். 3 மாதம் வெளிபூச்சு மருந்து பயன்படுத்த வேண்டும். டாக்டரின் அறிவுறுத்தல்படி, முறையான உடற்பயிற்சியாலும் தீர்வு காணலாம். தசைநார் கிழிதல் பிரச்னைக்கு, அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால் ஆரம்ப கட்டத்தில் வந்தால், சித்த மருத்துவத்தால் சரிசெய்ய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.