கோவை;சின்ன வெங்காயம் விதைப்புக் காலம் என்பதால், மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.கோவை தொண்டாமுத்துார், ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, கர்நாடகாவில் உள்ள குண்டல் பேட்டை, சாம்ராஜ்நகர் மற்றும் நொக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.சின்ன வெங்காயம் சீசனுக்கு ஏற்றபடி விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கமாகும். வெயில் காலம் என்பதால், கடந்த சில மாதங்களாக உற்பத்தி அதிகரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது கோடைமழை துவங்கி இருப்பதால், விவசாயிகள் சின்ன வெங்காயம் விதைப்பை துவங்கி உள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு, விவசாயிகள் பட்டறையில் சேமித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மட்டுமே, விற்பனைக்கு கொண்டு வரப்படும்.அதனால் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்னும் சில வாரங்களில் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 'விலை குறையவாய்ப்பில்லை'
கோவை காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் சீசன் காலத்தில் விலை குறைவாகவும், சீசன் இல்லாத போது அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.இப்போது கிலோ 60 ரூபாய் என்பது இன்னும் சில வாரங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது நடவு செய்யப்பட்டுள்ள வெங்காயம் விற்பனைக்கு வர, 70 நாட்களுக்கு மேல் ஆகும். அதுவரை சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.