கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், கோடை சாகுபடி சிறப்பு திட்டத்துக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், ஆண்டு சராசரி மழையாக 609 மி.மி., மழை பெறப்படுகிறது. இதில் கோடையில், ஏப்ரல் மாதத்தில் 36.5 மி.மீ., மே மாதத்தில் 75.60 மி.மீ., மழை சராசரியாக பெறப்படுகிறது.மேலும், ஆண்டிற்கு சராசரியாக சோளம் 26,080 ஹெக்டேர், மக்காச்சோளம் 3,978 ஹெக்டேர், கம்பு 175 ஹெக்டேர், ராகி 16 ஹெக்டேர், எள் 254 ஹெக்டேர், நிலக்கடலை 4,054 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.இதில், இரண்டாம் பருவம் கோடையில் சராசரியாக சோளம் 369 ஹெக்டேர், கம்பு 77 ஹெக்டேர், எள் 10 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.சோளம், கம்பு, ராகி, பயிறுவகைகள், நிலக்கடலை மற்றும் எள் போன்ற பயிர்களை குறைந்த காலத்தில் அறுவடை செய்யலாம். குறைந்த நீர் தேவை, குறைந்த மண்வளம் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய ஏற்றது. பூச்சி தாக்குதல் குறைவாக உள்ள பயிர்களாகும்.பயிர்களுக்கு கிடைக்கத் தேவையான திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்டக் கலவைகள், நோய் தாக்குதல் தடுக்க தேவையான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரசென்ஸ் போன்ற உயிர் பூஞ்சான கொல்லிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளது.தற்போது கோவை மாவட்டத்தில், கோடையில் சிறப்பு திட்டமாக, சிறுதானியங்கள் -1,425 ஹெக்டேர், பயிறுவகை 330 ஹெக்டேர், நிலக்கடலை -1,000 ஹெக்டேர், எள் - 300 ஹெக்டேர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், கோடை சிறப்பு திட்டத்தில், சிறுதானிய பயிர்கள் - 209 ஹெக்டேர், பயிர் வகைகள் - 42 ஹெக்டேர், நிலக்கடலை - 100 ஹெக்டேர், எள் - 10 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை கோவை வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.