| ADDED : ஆக 14, 2024 08:58 PM
கோவை : மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டி, கொடிசியா அருகில் உள்ள, ராக்ஸ் இறகுப்பந்து அகாடமியில், வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது.மாணவ - மாணவியருக்கு ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு இறகுப்பந்து சங்க பொது செயலாளர் அருணாச்சலம் கூறுகையில், ''இந்திய அளவில், தமிழக இறகுப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும், கோவையில் இருந்து பலர், சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இறகுப்பந்து விளையாட்டு, நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. வீரர்களின் திறமையை வளர்க்க, சர்வதேச அளவிலான அகாடமி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், மாவட்டங்களிலும் இறகுப்பந்து விளையாட்டு வளர, அகாடமி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். முதல் இரண்டு நாட்கள் தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெறும் நிலையில், இன்று மாலை முதல் சுற்றுப்போட்டிகள் துவங்குகின்றன.