பொள்ளாச்சி:அரசுப் பள்ளிகளில், உரிய விளையாட்டு தளம் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளி மாணவர்கள் பலர், விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட சில உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிய, அவர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய மைதானங்கள் இல்லாதது, மைதானம் இருந்தாலும் பராமரிப்பின்றி காணப்படுவது, விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.தற்போது, குறு மைய அளவில் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், அதில் பங்கு பெற ஆர்வம் இருந்தும், உரிய தளம் மற்றும் உபகரணங்கள் இன்றி தவித்து வருகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் கல்வி மட்டும் இல்லாமல், அடுத்த கட்ட நகர்வுக்கு வழிகாட்டுவது விளையாட்டு. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெறுவதன் வாயிலாக, கல்லுாரிகளில் சேர 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' இட ஒதுக்கீடு உதவுகிறது. தொடர்ந்து விளையாட்டில் சாதிக்கும்போது அரசுப்பணி, ரயில்வே, ராணுவம், போலீஸ் ஆகிய துறைகளில் சேர வாய்ப்பும் கிடைக்கும். ஆனால், பள்ளிகளில் ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கான தளம் கிடையாது.இதனால், வழக்கமாக, கால்பந்து, கோ-கோ, கபடி, பால்பேட்மிட்டன் போட்டிகளிலேயே அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த நிலை மாறுவதற்கு, தேவையான மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.