கோவை;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு, நேற்று, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளில், ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விதமான தேர்வு நடந்தது. இதில், 104 மாணவர்கள் பங்கேற்றனர்.கோவையில் செயல்படும் விளையாட்டு விடுதியில், தடகளம், வாலிபால், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற போதிய இடவசதி இல்லாத நிலையில், இந்தாண்டு முதல், ஜிம்னாஸ்டிக் பிரிவில் மாணவர்கள், திருநெல்வேலி அல்லது சென்னையில் உள்ள விடுதியில் சேர்க்கப்பட உள்ளனர்.தற்போது இந்த பிரிவில் பயிற்சி பெறும் மாணவர்கள், திருநெல்வேலி அல்லது சென்னைக்கு மாற்றப்பட உள்ளனர்.நேற்று நடந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க உள்ளனர். பங்கேற்ற மாணவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா அறிவுரை வழங்கினார். இன்று, மாணவியருக்கான தேர்வு நடக்கிறது.