உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமற்ற குடிநீர், பழங்களில் தயாராகும் பழரசங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தரமற்ற குடிநீர், பழங்களில் தயாராகும் பழரசங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை:தரமற்ற குடிநீர், பழங்கள் பயன்படுத்துவதாக புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதுகுறித்து ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் காரணமாக கோவையில் பழ ஜூஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர், பழங்களின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. நீண்டநாட்கள் தேக்கி வைக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதாகவும், ஒரு சில கடைகளில் தரமற்ற நீரை பயன்படுத்தி, பழரசங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து உணவுப்பாதுகாப்பு துறையினர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், புற்றீசல் போல், ஜூஸ் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இவர்கள், சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், பழரசங்களையும் வழங்குகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பாதுகாப்பு துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:தரமான பழச்சாறு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூஸ் தயாரிக்க சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தேக்கி வைத்த நீரை பயன்படுத்த கூடாது. நல்ல பழங்கள் பயன்படுத்த வேண்டும். பழங்கள் வைக்கும் இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கைகளில் கையுறை அணியவும், தலையில் தொப்பி போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லைசென்ஸ் பெறாமல் ஜூஸ் கடைகள் நடத்த கூடாது. மிக்ஸியை கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், திறந்த நிலையில் பழங்களை வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற ஜூஸ் குடிப்பதால் வயிற்று போக்கு, வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால், தற்போது ஜூஸ் கடைகளில் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பொது மருத்துவ துறை நிபுணர் டாக்டர் சவுந்திரவேல் கூறுகையில்,''இதுபோன்ற அழுகிய பழங்கள், சுகாதாரமற்ற நீரை பயன்படுத்தி பழரசங்கள், குளிர்பானங்கள் தயாரித்து அதை குடிப்பதால், நீரினால் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், சளி, இருமல், ஏற்படும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கார்பைடு கலந்துள்ள பழங்களை கொண்டு தயாரிக்கப்படும், பழரசங்களை குடிப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கண் முன், பழங்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
மே 07, 2024 14:31

குளிர்சாதன கிடங்கில் மாதக் கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் பழங்கள் கசப்பு தன்மையுடன் வருகிறது. சீசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விலையில் மாற்றம் இல்லாமல் உச்சத்திலே இருக்கும். ஆப்பிள் பழங்களுக்கு மெழுகை பூசிவிடுகிறார்கள். சுத்தமில்லாத மிக்சியில் அழுகிய பழத்தில் பச்சை பால், தண்ணீர், சர்க்கரை மற்றும் (சில ரசாயன பொருட்கள்) ஐஸ் கட்டியை போட்டு அடித்து கொடுக்கிறார்கள். கடைக்கு வெளியே சாக்கடை அருகில் தயாரிப்பதால் ஈக்கள் பழ ரசத்தை குடித்து மகிழ்கிறது. தொடர்ந்து குடித்த பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவம் அனேகம்.