| ADDED : ஜூலை 05, 2024 02:23 AM
உடுமலை;பட்டுப்புழு வளர்ப்பில், கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலங்களில் தரமான பட்டுக்கூடு கிடைக்காது.அந்த சீசனில் விலையும் இருக்காது. வெயில் காலத்தில் தான் ஓரளவு விலை உயர்ந்து லாபம் கிடைக்கும். தற்பொழுது நல்ல வெயில் நிலவுகிறது. பட்டுக்கூடுகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், ஒரு கிலோ பட்டுக்கூடு சராசரியாக, 450 ரூபாய்க்கே விலை போகிறது. இந்த விலை கட்டுப்படியானதாக இல்லை. இது பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.பட்டு விவசாயிகள் கூறுகையில், 'கிராமப்புறங்களில் கூலி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பட்டு கூடுகளின் விலை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் செலவு அதிகரித்து விலை கூடாமல் இருக்கிறது. நான்கைந்து ஆண்டுக்கு முன் விற்ற விலைக்கே இன்றும் விலை போகிறது.தரமான முட்டைகள் கிடைக்காததால் பட்டுக்கூடுகளின் தரம் குறைகிறது. தரமான முட்டைகள் கிடைக்கவும், கட்டுபடியான விலை கிடைக்கவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்,' என்றனர்.