| ADDED : ஆக 14, 2024 12:15 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தை அதிகம் பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் தென்னை மற்றும் தக்காளி சாகுபடி செய்கின்றனர். மற்ற வகை காய்கள் இடத்திற்கேற்ப குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து காய்களை விற்பனை செய்கின்றனர்.இதனால், கத்தரி காயில் 4.6 சதவீதம், வெண்டைக்காய் - 3.71, மிளகாய் - 5.13, தக்காளி - 4.1 சதவீதம் பூச்சிக்கொல்லி பயன்பாடு உள்ளது. காய்கறிகள் விரைவில் கெடும் தன்மை அடையும். மற்றும் அதிக ரசாயனம் பயன்படுத்திய விளை பொருட்களை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.காய்கறிகளில், 0.678 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு, பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. மேலும், 446 வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி, விற்பனை செய்வதில், சுமார், 70 பொருட்கள் இந்தியாவில் இருந்து செல்கிறது. இதில், 31 பொருட்கள் அதிக அளவு பூச்சிக்கொல்லியின் எஞ்சிய நச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ரசாயன பூச்சிக்கொல்லியை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும்.விவசாயத்திற்கு ரசாயன உரங்களை தவிர்த்து, வேப்பம் புண்ணாக்கு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும், என, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.