உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிக்கு செல்லும் வழியில் லாரி மோதி ஆசிரியை பலி; டிப்பர் லாரிகளால் மக்கள் திக்...திக்...

பள்ளிக்கு செல்லும் வழியில் லாரி மோதி ஆசிரியை பலி; டிப்பர் லாரிகளால் மக்கள் திக்...திக்...

கோவை : உக்கடம் அருகே டிப்பர் லாரி மோதி, பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வால், கனரக வாகனங்களுக்கான தடை நேரத்தை முன்கூட்ட கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மாநகரில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கைக்கேற்ப, சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதிவேகம், சாலை விதிகளை மதிக்காதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவையே, உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம்.இந்நிலையில், உக்கடம் அருகே டூ வீலரில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை அனிதா,45, நேற்று டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவர், குனியமுத்துாரில் உள்ள நிர்மல மாதா பள்ளிக்கு நேற்று காலை, 7:45 மணிக்கு, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி சென்றுள்ளார்.லாரி பேட்டை பெட்ரோல் பங்க் அருகே, அதே திசையில் வந்த 'டிப்பர் லாரி' மோதியதில், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தலைமறைவானார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, போத்தனுாரை சேர்ந்த டிரைவர் கலைசெல்வனை பிடித்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியை பணிபுரிந்த நிர்மல மாதா பள்ளிக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவ மாணவியர், சக ஆசிரியைகள் துக்கம் தாளாமல் அழுதனர்.மாநகரில் கடந்த ஜன., முதல் ஹெல்மெட் மற்றும் 'சீட் பெல்ட்' அணியாமல் சென்ற, 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நடந்த விபத்துகளில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனரக வாகனங்களுக்கு தடை: நேர கட்டுப்பாடு மாற்றணும்

காலை 8:00 முதல், 11:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் 8:00 மணி வரையும் கனரக வாகனங்கள் மாநகருக்குள் வந்து, செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காலை, 7:00 மணி முதலே மக்கள் புறப்பட துவங்குகின்றனர். எனவே, கனரக வாகனங்களுக்கான தடை கட்டுப்பாட்டை காலை, 7:00 மணி முதலே முன்கூட்ட கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ரோஹித் நாதன் ராஜகோபாலிடம் கேட்டதற்கு, ''இவ்விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணையை துவங்கியுள்ளோம். கனரக வாகனங்களுக்கான தடை நேரத்தை முன்கூட்டுவது குறித்து, ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

மது குடிப்பதற்கு 'ஸ்பாட்'

புறநகரில் இருந்து மாநகருக்குள் நுழையும் டிப்பர் லாரி டிரைவர்கள் பேக்கரி, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி, மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உதாரணத்துக்கு, செட்டிபாளையம், ஒராட்டு குப்பை பகுதியில், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி மது குடித்துவிட்டு புறப்படுகின்றனர். அப்பகுதியில் உள்ள குபேரன் நகரின் வெளியே, இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால் வளைவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அங்குள்ள வளைவான ரோடுகளில் வேகத்தடைகள் நிறுவி, வாகன விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ெஹல்மெட் 'லாக்' முக்கியம்

நேற்றைய விபத்தில் ஆசிரியை அனிதா, 'ஹெல்மெட்' சரியாக அணியாததால், கீழே விழுந்ததும் அது தனியே கழன்று, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்ததாக, போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். முக்கியமாக, ெஹல்மெட்டை தலையுடன் இறுக இணைக்கும், பெல்ட் சரியாக 'லாக்' ஆகியிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ